திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா - திரளான பக்தர்கள் தரிசனம்
காரைக்கால் , 06 மார்ச் (ஹி.ச.) புதுச்சேரி அருகே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருக
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா - திரளான பக்தர்கள் தரிசனம்


காரைக்கால் , 06 மார்ச் (ஹி.ச.)

புதுச்சேரி அருகே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இன்று காலை 8.24 மணிக்கு பிரவேசிக்கும் நிகழ்வை குறிக்கும் வகையில், தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் மங்கள வாத்தியங்கள் இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

முன்னதாக சனி பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மலர்களால் மாலை சாத்தப்பட்டு, தங்க அங்கியுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.

தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் நளன் குளத்தில் அதிகாலை முதல் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினர். பிறகு சனீஸ்வரபகவானை தரிசிக்க கோயிலுக்கு சென்றுகொண்டிருக்கிறனர். நளன் தீர்த்தக் குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தீர்த்தக்குளத்தில் யாரேனும் மூழ்கிவிட்டால், அவரை மீட்க நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் படகு மூலம் குளத்தை சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலை முதல் வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம், திருநள்ளாற்றில் பல்வேறு இடங்களில் கட்டணத்துக்கான டிக்கெட் வழங்கும் மையத்தை அமைத்துள்ளது.

தரிசனம் செய்வதற்கு வசதியாக கட்டணமில்லா தரிசனம் மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1,000 ஆகிய வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பிலும், பிற அமைப்புகள் சார்பிலும் அன்னதானக்கூடம் அமைத்து, பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டுவருகிறது.

கோயிலில் தங்க காக வாகனத்தில் உற்சவரான ஸ்ரீ சனீஸ்வரபகவான் வடக்குப் பிரகார மண்டபத்துக்கு வியாழக்கிழமை இரவு எழுந்தருளச் செய்யப்பட்டார். வரிசையில் செல்லும் பக்தர்கள் தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வரபகவானை தரிசித்து செல்கின்றனர்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்,மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / vidya.b