Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 06 மார்ச் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு துறைகள் மூலம் 7,127 பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (மார்ச் 6) நடைபெற்றது.
இவ்விழாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 7,127 பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் 32 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்கி வைத்தார்.
மேலும் ரூ.55.93 கோடி மதிப்பீட்டில் 185 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்த விழாவில் மகளிர் அதிகமாக பங்கேற்றுள்ளீர்கள். உங்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே திராவிட மாடல் வெற்றிக்கு சாட்சியாக உள்ளது. இந்தியாவிலேயே மகளிர் முன்னேற்றதுக்காக தமிழக முதல்வர் பல முன் மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் மகளிர் விடியல் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் 12 கோடி பயணங்களை மகளிர் மேள்கொண்டுள்ளனர்.
காலையில் தாய்மார்கள் சமையல் செய்து, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப சிரமப்படக் கூடாது என்பதற்காக பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கொண்டுவந்தார். தென்காசி மாவட்டத்தில் 12 ஆயிரம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரம் மாணவிகள் பயனடைகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தமிழக முதல்வர் வழங்கினார். இத்திட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் 4,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் 1.31 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 3.30 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெறுகின்றனர். தேர்தலை காரணம் காட்டி இத்திட்டத்தை நிறுத்த சில பேர் முயற்சி செய்தனர். ஆனால் தமிழக முதல்வர் அதனை முறியடித்து, 1.31 லட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயை முதல்வர் வழங்கினார்.
மேலும், கோடை கால சிறப்பு நிதியாக விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,000 வழங்கினார். இத்திட்டத்தில் 38 லட்சம் பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார்.
ரூ.300 கோடி மதிப்பில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் - தென்காசி இடையே நான்குவழிச் சாலை திட்டம் ரூ.251 கோடியில் நடைபெறுகிறது. திருநெல்வேலி- ஆலங்குளம் நான்குவழிச் சாலை திட்டம் நடைபெற்று வருகிறது. ரூ.15 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுளளது.
முற்போக்கான திட்டங்களால் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. 11.19 சதவீத வளர்ச்சியுடன் சிறப்பான இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிர் சுய உதவி குழுக்களை ஆரம்பித்தவர் முள்ளாள் முதல்வர் கருணாநிதி.
ஆரம்பத்தில் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் இணைப்பு பெற்று, அதை குடும்ப தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தீர்கள். இப்போது, கடனுதவி வழங்கி உங்களை தொழில் முனைவோராக மாற்றியுள்ளார் தமிழக முதல்வர். மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டை புகைப் படத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவி குழுவினர் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி பேருந்துகளில் எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம். கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடனுதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி, பெரிய தொழில்முனைவோராகி மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உங்கள் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
அரசு அலுவலகங்களை தேடி பட்டா வாங்க காத்திருந்த நிலை மாறி அரசே உங்களை தேடி வந்து பட்டா வழங்குகிறது. வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் கொண்டுவரப்பட்டது. விவசாயிகள் நலன் காக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதுடன், அவர்களது உரிமைகளையும் உறுதி செய்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் எதிரொலிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேய முதல் மாநிலமாக தமிழகத்தில் நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யும் முறையை தமிழக முதுல்வர் செயல்படுத்தி உள்ளார்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. மக்களுடன் மக்களாக களத்தில் நிற்கும் ஒரே முதல்வர் நமது முதல்வர். ஒவ்வொரு நாளும் மக்களுக்காக அயராது உழைக்கிறார். அடுத்து வரும் திராவிட மாடல் 2.O ஆட்சியில் இன்னும் அதிக திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவார். இந்த அரசுக்கு பக்கபலமாக இருந்து, தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இவ்விழாவில் தென்காசி தொகுதி எம்.பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார், ஈ.ராஜா, டாக்டர் சதன் திருமலைக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b