இமயமலை கருப்பு கரடி மற்றும் சிறுத்தை பூனைகள் வண்டலூர் பூங்காவிற்கு வருகை!
சென்னை, 07 மார்ச் (ஹி.ச.) சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகப் பெரிய பழமையான பூங்காவாகும். இந்த பூங்கா சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் நவீன வசதிகளுடன் சுமார் 180 வகையான 2,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் பர
Vandalur


சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகப் பெரிய பழமையான பூங்காவாகும். இந்த பூங்கா சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் நவீன வசதிகளுடன் சுமார் 180 வகையான 2,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இந்த நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்கு பரிமாற்று திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்பு பூங்காவிலிருந்து ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடி மற்றும் ஒரு ஜோடி சிறுத்தை பூனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது,

விலங்கு பரிமாற்று திட்டத்தின் கீழ் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இமயமலை கருப்பு கரடி மற்றும் ஒரு ஜோடி சிறுத்தை புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த விலங்குகள் பாதுகாப்பாக ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டன.

பயணத்தின் போது விலங்குகளை விலங்கு பராமரிப்பாளர்கள் மற்றும் மருத்துவக் குழு தொடர்ந்து கவனித்து பராமரித்தனர்.

நீண்ட பயணத்தின் போது அவற்றின் நலனை உறுதி செய்ய உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்காக அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டது.

மேலும், அவற்றின் உணவாக பருவத்திற்கேற்ற பழங்களும் பொருத்தமான உணவு வகைகள் வழங்கப்பட்டது. மேலும் 21 வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஜோடி சிறுத்தை பூனைகள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்விலங்குகள் நிலையான உயிரியல் பூங்கா நெறிமுறைகளின்படி, பூங்கா மருத்துவர்களின் பராமரிப்பில் அடுத்த 21 நாள்கள் இருக்கும்.

பின்னர் விலங்குகள் அவற்றின் விலங்கு இருப்பிடத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.

இந்த விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து ஜம்பு பூங்காவிற்கு ஒரு ஜோடி நீர்யானைகள் அனுப்பப்பட உள்ளது. இவை ஜம்பு உயிரியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்படும் முதல் நீர் யானைகளாக இருக்கும்.

இது அப்பூங்காவின் குறிப்பிடத்தக்க விலங்கு சேகரிப்பின் பன்முகத்தன்மையை மேம்படுத்துகிறது.

நீர் யானைகளை அனுப்புவதற்கு முன் ஐம்பு உயிரியல் பூங்காவின் விலங்கு காப்பாளர்களுக்கு நீர் யானைகளின் மேலாண்மை மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு வார காலப் பயிற்சி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் விலங்கு கையாளுதல், உணவளிக்கும் நடைமுறைகள், சுகாதார கண்காணிப்பு மற்றும் விலங்கு இருப்பிட மேலாண்மை போன்ற முக்கிய பணிகளை கற்றுக்கொள்வார்கள். இந்த விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் மூலம் இரண்டு உயிரியல் பூங்காக்களின் விலங்கு சேகரிப்பு வலுபெறுகிறது என சென்னை உயிரியல் பூங்கா அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN