Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
சென்னையின் 11 மண்டலங்களில் மின் கட்டண சேவைகள் 2 நாட்கள் செயல்படாது என மின்பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், மின்நுகர்வோர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில், கணினி சேவைகளை புதிய சர்வர்களுக்கு படிப்படியாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த மேம்பாட்டுப் பணிகள் முதல்கட்டமாக சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை வடக்கு, சென்னை மத்தியம் மற்றும் சென்னை மேற்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பொன்னேரி, எழும்பூர், தியாகராயநகர், அண்ணாசாலை, மயிலாப்பூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12.01 மணி முதல் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்களுக்கு மின்கட்டணத்தை ஆன்லைன் மற்றும் மின்கட்டண வசூல் மையங்கள் மூலம் பணம் செலுத்தும் சேவைகள் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகளை பெற இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், இன்று (சனிக்கிழமை) கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு 9-ந்தேதி வரையில் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர் தங்களது மின்கட்டணங்களை செலுத்துவதற்கும் மற்றும் புதிய மின்இணைப்புக்கான விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Hindusthan Samachar / JANAKI RAM