எரிவாயு உருளையின் விலையை உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது கடுமையான பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் - ஜவாஹிருல்லா
சென்னை, 07 மார்ச் (ஹி.ச.) சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களின் வாழ்வை மேலும், சுமையாக்கும் அதனால் ஒன்றிய அரசின் முடிவு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அ
Jawahirulla


சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)

சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களின் வாழ்வை மேலும், சுமையாக்கும் அதனால் ஒன்றிய அரசின் முடிவு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது கடுமையான பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் ஒன்றாகும்.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பு குறைவு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பொதுமக்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சமையல் எரிவாயு விலை உயர்வு அவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் நடவடிக்கையாகும்.

மார்ச் 7 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வின் மூலம் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையும் ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் உணவகங்கள், சிறிய உணவுக் கடைகள், தேநீர் கடைகள் போன்ற சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன. அதன் தொடர்ச்சியாக உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் ஒன்றிய அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை காரணம் காட்டி சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகும்.

இது பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிய உணர்வு இல்லாத ஒரு முடிவாகவே அமைந்துள்ளது.

ஏற்கனவே பணவீக்கம் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திர செலவுகளை மேலும் அதிகரித்து, அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சமையல் எரிவாயு உருளையின் விலையை உயர்த்தியுள்ள இந்த முடிவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ