Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 07 மார்ச் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டும் விதமாகவும், வன்முறையான வார்த்தைகளை பயன்படுத்தி, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்யும் நபர்கள் மீது தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் விஜயநாராயணம் மற்றும் நாங்குநேரி போலீஸ் நிலையங்களில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக, வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தொடர்ந்து கடந்த 1 வாரத்தில் நெல்லை மாவட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 சிறுவர்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தமாக மாவட்டத்தில் விஜயநாராயணம், மூலைக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா 1 வழக்கு, மானூர், மூன்றடைப்பு போலீஸ் நிலையங்களில் தலா 2 வழக்குகள், நாங்குநேரியில் 4 வழக்குகள் என 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வன்முறை மற்றும் பிரச்சினையை தூண்டும் வகையில் இதுபோல பிரச்சனைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பும் மற்றும் பதிவு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற இது போன்ற கருத்துக்களை விஷம தனத்துடன் பதிவு செய்வதை தவிர்த்து, சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN