பதவி நீக்கம் செய்யப்படுவாரா ஓம் பிர்லா?
புதுடெல்லி , 07 மார்ச் (ஹி.ச.) பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது. மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அம
பாராளுமன்றம்


புதுடெல்லி , 07 மார்ச் (ஹி.ச.)

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.

கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது.

மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியை தொடங்கிய எதிா்க்கட்சிகள், முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தன.

கடந்த 3-ம் தேதி மக்களவையில் காகிதங்களை கிழித்து அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு வருகிற 9-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்த அமர்வு நடைபெறுகிறது.

பாராளுமன்ற மக்களவையில் முதல் நாளிலேயே சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனால் அன்றே சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான பதவி நீக்கம் தீர்மான விவாதம் கொண்டு வரப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி அவை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்குமாறு எம்.பி.க்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அரசமைப்பு சட்டத்தின் 94சி பிரிவின் கீழ் பெரும்பான்மையான வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றி சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

தற்போது பா.ஜ.க. கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர்.

கடந்த காலங்களில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர்களாக இருந்த ஜி.வி. மாவலங்கர் (1954), ஹூக்கம் சிங் (1966), பல் ராம் ஜாக்கர் (1987) ஆகியோர் இதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டனர்.

ஆனால் எந்த தீர்மானமும் வெற்றி பெறவில்லை.

தற்போது எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஓம்பிர்லாவுக்கு எதிரான தீர்மானமும் தோல்வியை சந்திக்கும்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும்.

மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில்ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam