Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டிருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
தமிழக எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூரில் அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைத்திருக்கும் கேரள அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – கூட்டணி தர்மத்திற்காக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை தாரைவார்த்தது போல எல்லைப் பகுதியையும் பறி கொடுப்பதற்கு பெயர் தான் திராவிட மாடலா?
தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாளூரில் கேரளத்தை வரவேற்கும் வகையிலான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்தின் ஒரு எல்லைப் பகுதியாக இருக்கும் நீலகிரி மாவட்டத்தின் தாளூருக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து, தங்களது எல்லை என கேரளம் உரிமை கொண்டாடுவதும், அதனைத் தடுக்கவோ, கண்டிக்கவோ முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் திமுக அரசின் மௌனமும் கடும் கண்டனத்திற்குரியது.
நீலகிரி மாவட்டத்தில் கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை தமிழகத்தின் மற்ற எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்குவதோடு அவர்களின் நில உரிமையும் பறிபோகும் அளவிற்கு அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாகவும் உயிர் நாடியாகவும் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் ஒரு பகுதியாக அங்குள்ள மரங்களைக் கூட வெட்ட அனுமதிக்காத கேரள அரசு, தமிழகத்திற்குள் நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் அளவிற்குத் துணிந்திருப்பதை கூட்டாட்சி தத்துவத்திற்கு விடுத்திருக்கும் சவாலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
திமுகவுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதில் தீவிரம் காட்டுவதும், தமிழகத்தின் எல்லைப் பகுதியை கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆக்கிரமிக்க முயல்வதையும் பார்க்கும் போது, திமுக அரசு மாநில உரிமையை விட்டுக் கொடுத்து தான் தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டிருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b