Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் கேரள அரசின் தன்னிச்சையானப் போக்கைக் கண்டிக்கிறோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழக கேரள எல்லைப் பகுதியில், கூடலூர் அருகே தமிழக அரசின் ஒப்புதலின்றி கேரள அரசு ஒருதலைப்பட்சமாக எல்லை அறிவிப்புப் பலகைகளை நட்டுள்ள செய்தி, பேரதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.
அண்டை மாநிலங்கள் பேண வேண்டிய கண்ணியத்தையும், ஜனநாயக மரபுகளையும் காலில் போட்டு மிதிக்கும் இச்செயலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை என்பது சட்டரீதியான ஆவணங்களின் அடிப்படையில் அமைய வேண்டிய ஒன்று. ஆனால், தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல், தன்னிச்சையாக எல்லைக் கோடு கிழிப்பது அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போக்காகும்.
பல ஆண்டுகாலமாகத் தமிழகமும் கேரளாவும் பகிர்ந்து வரும் சகோதரத்துவ உறவில் இத்தகைய அத்துமீறல்கள் விரிசலை உண்டாக்குகின்றன. இது அண்டை மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட செயலாகும்.
எல்லையோரப் பகுதிகளில் வாழும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களது நில உரிமையையும் கேள்விக்குறியாக்கும் வகையில் கேரள அரசு பதற்றத்தை விதைத்து வருகிறது.
தமிழகத்தின் ஒவ்வொரு அங்குல நிலமும் நமது தொப்புள்கொடி உறவுகளின் இரத்தமும் சதையுமாகும். நிலப்பரப்பு, மொழி அடையாளம் மற்றும் வரலாற்று உரிமைகளை எள்ளளவும் விட்டுக்கொடுக்க முடியாது என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சமரசமற்ற நிலைப்பாடாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, உயர்மட்டக் குழு மூலம் கள ஆய்வு நடத்தி, கேரள அரசின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிக்க வேண்டும். தமிழகத்தின் எல்லைக் காவலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாதவாறு உறுதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தமிழகத்தின் தார்மீக உரிமைகளைச் சீண்ட நினைப்பவர்கள் எவராயினும், அதனைத் தமிழக மக்கள் ஒருபோதும் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள்.
நிலமும் மொழியும் எமது உயிர். அதனைத் தற்காக்க எத்தகையப் போராட்டங்களையும் முன்னெடுக்கத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தயங்காது எனவும் எச்சரிக்கிறோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ