Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 மார்ச் (ஹி.ச)
திமுகவின் முழு நேர தேர்தல் தூதர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகக் காவல்துறையின் ஈரல் மொத்தமாக அழுகிவிட்டது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் கண்டனம் எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், சீருடையில் இருந்த காவலர் மதுபோதையில் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கின்றது. தன்னிடம் அத்துமீற முயன்ற காவலரைத் துணிச்சலுடன் எதிர்த்து, சமயோசிதமாக அவரை வீட்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டு தப்பிய பாதிக்கப்பட்ட பெண்ணின் மன உறுதியை மனதார பாராட்டுகிறேன்.
திமுகவின் முழு நேர தேர்தல் தூதர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகக் காவல்துறையின் ஈரல் மொத்தமாக அழுகிவிட்டது என்பதற்கு மற்றுமொரு சான்றான இச்சம்பவம் தமிழகத்திற்கே பெரும் தலைகுனிவு. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் திமுகவின் அவல ஆட்சியில், அரசை நம்பியோ காவல்துறையை நம்பியோ பெண்கள் இருக்கக்கூடாது, அனைத்துப் பெண்களும் ஏதாவதொரு தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் காரணம் இதுதான்.
திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை இரு காவலர்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த போதே, தமிழகக் காவல்துறையின் மீது மக்கள் முழுவதுமாக நம்பிக்கை இழந்துவிட்டனர்.
சட்டம் ஒழுங்கைத் தமது நேரடிக் கண்காணிப்பில் இயக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இனி பெண்களின் பாதுகாப்பு குறித்து வாயைத் திறக்கவே கூனிக் குறுக வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ