தூய்மைப் பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்
சென்னை, 07 மார்ச் (ஹி.ச.) மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர களப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான
தூய்மைப் பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்


சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)

மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர களப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று (07.03.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இதன் தொடக்கமாக, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், மயானபூமி பணியாளர்கள், பொது கழிவறை மற்றும் மலேரியா பணியாளர்கள் என 100 தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கப்பட்டது.

இத்திட்டம் அனைத்து மண்டலங்களிலும் பணிபுரியும் 29,461 மாநகராட்சிப் பணியாளர்களுக்கு 09.03.2026 அன்று முதல் ஆவின் மோர் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில் கோடைக் காலங்களான மார்ச் மாதம் 2026 முதல் ஜூன் மாதம் 2026 வரை ஆவின் நிறுவனத்திடம் இருந்து குளிர்ச்சியான 200 மீ. லிட்டர் மோர் ரூ.8 விலைக்கு கொள்முதல் செய்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் பணிபுரியும் நிரந்தர, சுயஉதவிக் குழு, என்.எம்.ஆர். மற்றும் தனியார் நிறுவனத்தினர் மூலம் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், மயானபூமிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், பொதுக் கழிவறைகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சியின் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானப் பணியாளர்கள் மற்றும் களப் பணியில் ஈடுபடும் சாலைப் பணியாளர்கள் என மொத்தம் 29,461 பணியாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிறுவனத்திற்கு ரூ.8/-க்கு குளிர்ச்சியான 200 மில்லி லிட்டர் மோரை (பாக்கெட்டில்) மண்டலங்களில் அடையாளம் காட்டப்பட்ட 30 இடங்களில் விநியோகம் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தோராயமாக ரூ.2.83 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, கண்காணிப்பு பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மைத் துறை) பாலமுரளி மற்றும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b