Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச)
சென்னை மாநகர போக்கு வரத்து கழகமான, எம்.டி.சி., யில் தற்போது, தினமும், 3,500 பேருந்துகள் 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும், 34 லட்சம் பேர் பயணித்து வருகின்றனர்.
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்கேற்ப, கூடுதல் பேருந்துகளை இயக்கும் முயற்சியில், எம்.டிசி, ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து, எம்.டி.சி, அதிகாரிகள் கூறியதாவது.
எம்.டி.சி, சார்பில், 3,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருவதால், 2030ல் மாநகர பேருந்துகளின் தேவை, 7,214 ஆக இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
எனவே, உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பங்களிப்புடன், சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக, 524 மின்சார பேருந்துகளின் சேவை துவங்கப் பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக, 750 மின்சார பேருந்துகள் இயக்க டெண்டர் வெளியிட்டு, நிறுவனம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, 1,000 'ஏசி' மின்சார பேருந்துகள் இயக்க டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் அடுத்த ஒரு ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கடந்த 2027ல், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளின் எண்ணிக்கையை, 5,406 ஆக உயர்த்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b