Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 08 மார்ச் (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் வட்டாரத்தில் சக்திகுளங்கரை என்ற இடத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவில் மீனவர்கள் மீன் பிடிக்க ஒரு படகில் கடலுக்குப் பயணித்தனர்.
அந்தப் படகில் மொத்தம் 11 மீனவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அப்படி இருக்கையில், கேரளாவில் இருந்து சுமார் 120 கடல் மைல் தூரத்தில் நேற்று இரவு அந்த மீன்பிடி படகு சென்றுகொண்டிருந்தது.
அப்பொழுது நடு கடலில் போய்க்கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு சரக்குக் கப்பல் மீது அந்த மீன்பிடி படகு எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தின் விளைவாக படகு நொடிப்பொழுதில் கடலில் மூழ்கியது. படகில் இருந்த 11 மீனவர்களும் கடலில் பரிதவித்தார்கள்.
அதன் பிறகு, விபத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு கப்பலில் இருந்த ஊழியர்கள் கடலில் தத்தளித்த மீனவர்களில் 9 பேரை காப்பாற்றினார்கள்.
இருந்த போதிலும், கடலில் மூழ்கிப் போன 2 மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிகழ்வை பற்றி இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த 9 மீனவர்களையும் கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வர கடற்படையினர் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மேலும், கடலில் மூழ்கி இதுவரை கண்டுபிடிக்க முடியாத மற்ற 2 மீனவர்களையும் தேடும் பணி தொடர்ந்து நடக்கும் என்று உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விபத்துக்குள்ளான அந்த மீன்பிடி படகில் இருந்த மீனவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM