Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிலையில், அதற்கானத் தொகுதிகளைத் தேர்வு செய்வது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகள் அடங்கிய பட்டியலைத் தயாரித்து, அதில் 28 தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சட்டமன்றத் தேர்தல் பார்வையாளருமான முகுல் வாஸ்னிக் கலந்துகொண்டார். மேலும், மேலிடப் பார்வையாளர்கள் குவாசி முகமது நிஜாமுதீன், கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவுள்ள 28 இடங்கள் எவை என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் 35 தொகுதிகள் கொண்ட உத்தேசப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலைத் தி.மு.க.விடம் வழங்கி, பேச்சுவார்த்தை மூலம் அதில் 28 தொகுதிகளைத் தக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரைத் தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்காக அழைத்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வேட்பாளர் தேர்வு குறித்து நிர்வாகிகள் தரப்பில் சில முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஏற்கனவே 2 அல்லது 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல், புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அதிக இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி நிலவரம் :
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளான தேவதாஸ், தனுஷ், இளையராஜா, செந்தில் குமார், மோகன்தாஸ் உள்ளிட்டோருடன் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டிய தொகுதிகள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
கார்த்தி சிதம்பரம் பேட்டி:
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கார்த்தி சிதம்பரம்,
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் அடங்கிய பட்டியலை முகுல் வாஸ்னிக்கிடம் வழங்கியுள்ளேன்.
ஏற்கனவே காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளைத் தாண்டியும் சில தொகுதிகளைப் பரிந்துரைத்துள்ளேன். இம்முறை பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை ராகுல் காந்தி உட்பட அனைவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர்,என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ