Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 08 மார்ச் (ஹி.ச.)
பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அந்த வகையில் அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இதன் காரணமாகப் பீகாரின் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அம்மாநிலத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் துணை முதல்வராக நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நிஷாந்த் குமார், பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அலுவலகத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வமாக இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார்.
முன்னதாக கட்சி அலுவலகத்திற்கு வந்த வந்த அவருக்கு, கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அவர் கட்சித் தொண்டர்களிடம் பேசுகையில்,
அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற முழுமையாக முயற்சிப்பேன்.
கடந்த 20 ஆண்டுகளில் எனது தந்தை பீகாருக்காகச் செய்த பணிகளைக் கண்டு நானும், ஒட்டுமொத்த பீகார் மக்களும், தேசமும் பெருமை கொள்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வாரிசு அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முதல்வர் நிதிஷ்குமார் தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது நிஷாந்த் குமாரின் வருகை பீகார் அரசியலில் மிக முக்கியமான
திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b