பழனி கோயிலில் விடுமுறை, முகூர்த்த தினத்தை முன்னிட்டு பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
திண்டுக்கல், 08 மார்ச் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமிமலைக்கோயிலில் வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு
Palani Murugan Temple


திண்டுக்கல், 08 மார்ச் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமிமலைக்கோயிலில் வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால், அடிவாரம் மற்றும் கிரிவீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மலைக்கோயிலுக்குச் செல்வதற்காக வின்ச் ரயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தை முறைப்படுத்தும் வகையில், பக்தர்கள் குடமுழக்கு மண்டபம் வழியாகப் படிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மலைக்கோயிலில் உள்ள பொது தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வரிசைகளிலும் கூட்டம் மிகுந்திருந்ததால், சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் கூடுதலாக 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பழனி அடிவாரம் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

Hindusthan Samachar / ANANDHAN