ஆன்லைன் பண பரிவர்த்தனை மோசடி - போலீஸ் உட்பட 7 பேர் கைது
ராமநாதபுரம், 08 மார்ச் (ஹி.ச.) ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் நடந்த மோசடியில் பல கோடி ரூபாயை இழந்ததாக சென்னையைச் சேர்ந்த சிலர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த
Cyber Crime


ராமநாதபுரம், 08 மார்ச் (ஹி.ச.)

ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் நடந்த மோசடியில் பல கோடி ரூபாயை இழந்ததாக சென்னையைச் சேர்ந்த சிலர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த சிலரை கைது செய்து விசாரித்த போது, இந்த மோசடியில் போலி வங்கி கணக்கு துவங்கி பணப்பரிவர்த்தனை செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ராமநாதபுரம் பகுதிக்கு திடீரென சென்று புல்லங்குடி பகுதியை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் பிரதீப், போகலூர் பகுதியைச் சேர்ந்த அப்ரின், சேதுபாண்டியன், சல்மான் கான், சத்திரக்குடியை சேர்ந்த தவமுருகன், முகேஷ்வரன், பரமக்குடியைச் சேர்ந்த ஆஷிக் சமுதின் ஆகிய ஏழு பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடமிருந்து ஏராளமான வங்கி கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள், பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் ஏழு பேரையும் கைது செய்து சென்னை சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர்கள் பயன்படுத்தி வரும் கார்கள், இருசக்கர வாகனங்கள், சொத்து விபரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN