Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 08 மார்ச் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி இறங்கும் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.
இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்தாண்டு பூக்குழி திருவிழா வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். கோயில் கொடி பட்டம் மேளதாளம் முழங்க நகரின் பல்வேறு வீதி வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
பின்னர் கொடிமரத்திற்கு அருகே கொடிபட்டம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து மார்ச் 18ம் தேதி நடைபெறும் பூக்குழி விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஜோதிலட்சுமி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b