பழப்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
ஈரோடு, 08 மார்ச் (ஹி.ச) பழப்பெரும் நடிகை கே.பி சுந்தராம்பாளின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நிறுவப்பட்ட ஆறரை அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். கொடுமுடி கோகிலம் என்று எம
Stalin inaugurated the statue of veteran actress K.P. Sundarambal today


ஈரோடு, 08 மார்ச் (ஹி.ச)

பழப்பெரும் நடிகை கே.பி சுந்தராம்பாளின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நிறுவப்பட்ட ஆறரை அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

கொடுமுடி கோகிலம் என்று எம்ஜிஆரால் புகழப்பட்ட கே பி சுந்தராம்பாளின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி. தனது வசீகர வெண்கல கணீர் குரலால் மிகவும் புகழ்பெற்ற பாடகியாகவும், நடிகையாகவும் விளங்கிய கே பி சுந்தராம்பாள் அந்த காலத்திலேயே தமிழ் சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர்.

தமிழ் இசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் என பல துறைகளில் புகழ் ஈட்டிய அவர், கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவை தொடர்பாகப் பாடல்களை பாடி மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டினார்.

காமராஜர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

அவர் பிறந்த ஊரான கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் புகழ் சேர்க்க அவருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என இப்பகுதியினரின் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று கொடுமுடி பிரதான சாலையில், தனியாக இடம் வாங்கி அதில் ஆறரை அடி உயரத்தில் கே பி சுந்தராம்பாளின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது இதனை காணொலி மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் எம்.பிக்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கே பி சுந்தராம்பாளுக்கு சிலை அமைத்ததற்கு அவரது உறவினர்களும் நாடக இசை கலைஞர்களும் நன்றியும் வரவேற்பும் தெரிவித்தனர்.

கொடுமுடியின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் கே பி சுந்தராம்பாளின் சிலை நிறுவப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

காலத்திற்கும் அழியாத கே பி சுந்தராம்பாளின் நினைவை காலமெல்லாம் இந்த சிலை பறைசாற்றும் என்றும், மகளிர் தினத்தில் திறந்து வைத்திருப்பது கூடுதல் பெருமை என்றும் அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b