Enter your Email Address to subscribe to our newsletters

ஆமதாபாத், 08 மார்ச் (ஹி.ச.)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த ஆட்டத்தில் 20 குழுக்கள் பங்கேற்றன. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாகவும், இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை வென்று நான்காவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மோதுகின்றன.
இந்த முக்கியமான ஆட்டத்தை பார்க்க, ஆமதாபாத் மைதானத்தில் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் கூடுவார்கள்.
சொந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் விளையாடும் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா அல்லது நியூசிலாந்து அணி முதன்முறையாக உலகக்கோப்பையை கையில் வாங்குமா என்பதே கிரிக்கெட் உலகின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
பொதுவாக இது போன்ற ஆட்டத்தில் இரண்டு அணிக்குமே அதிக நெருக்கடி இருக்கும். அதனால், இந்த அழுத்தமான சூழ்நிலையை எந்த அணி திறமையாக கையாள்கிறதோ அவர்களுக்கே வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.
இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM