திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா - இன்று காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
திருச்சி, 08 மார்ச் (ஹி.ச.) திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலானது சக்தி தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. இக் கோவிலில் அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரங்களை நவ சர்ப்பங்க
Trichy Samayapuram Mariamman Temple


திருச்சி, 08 மார்ச் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலானது சக்தி தலங்களில் முதன்மையாக விளங்குகிறது.

இக் கோவிலில் அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரங்களை நவ சர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள் பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவகிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியது. இவ்விழா அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் பூஜைகளுடன் இன்று காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

யானை மீது பூத்தட்டு வைக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் தேரோடும் வீதியில் ஊர்வலமாக வந்து பூக்களை சாட்டி வழிபட்டனர்.தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையர் எம்.சூரியநாராயணன், அறங்காவலர்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் 1,500 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பக்தர்களுக்காக குடிநீர் சுகாதார உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b