Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 மார்ச் (ஹி.ச)
மேற்கு வங்கத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, மம்தா பானர்ஜி அவமதிக்கும் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மேற்கு வங்கத்தில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திட்டமிட்டு அவமதிப்பு – அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவரை அரசியல் காரணங்களுக்காக அவமதித்திருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
மேற்குவங்கம் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களை, அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிட்டு அவமதித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் எந்தவொரு மாநிலத்திற்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் முதலமைச்சரோ, அமைச்சரோ நேரில் வந்து வரவேற்க வேண்டும் என்ற நெறிமுறைகளை மீறியதோடு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின் இடத்தையும் இறுதி நேரத்தில் மாற்றியமைத்து, அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகப் பழங்குடியின சமுதாயத்திலிருந்து இந்தியாவின் உயரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை, பழங்குடியினர் சார்ந்த நிகழ்விலேயே அவமதிக்கும் நோக்கில் பல்வேறு தடைகளை மேற்குவங்க அரசு ஏற்படுத்தியிருப்பது ஒட்டுமொத்த பழங்குடியினர் சமூகத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
எனவே, மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஒட்டுமொத்த பழங்குடியின மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ