அதிகாரத்தின் கரங்களில் அநியாய மரணங்கள்,இன்னும் எத்தனை அஜித்குமார்கள்? - தவெக அருண் ராஜ்
சென்னை, 08 மார்ச் (ஹி.ச.) மானாமதுரை விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் உயிரிழந்த நிலையில், தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், சிவகங்கை மாவட்டம், மானா
TvK Arun Raaj


சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)

மானாமதுரை விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் உயிரிழந்த நிலையில், தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் ஆகாஷ், காவல்துறையின் பிடியில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு இளைஞர் உயிரிழப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு கறைபடிந்த சாட்சியாக அமைந்துள்ளது.

ஆகாஷ் ஆரோக்கியமாகத்தான் பிடிபட்டார்; ஆனால் காவல்துறை அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது என அவரது உறவினர்கள் கதறுகின்றனர். காவல்துறையினர் திட்டமிட்டே அவரை அடித்துக் கொன்றுவிட்டு, இப்போது தற்காப்பு வாதங்களை முன்வைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கைது செய்யப்படும்போது கால் முறிவதும், பிறகு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிவதும் தமிழக காவல்துறையின் வாடிக்கையான திரைக்கதையாக மாறிவிட்டதா? சட்டத்தின் பிடியில் இருப்பவர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க முடியாத அவலநிலை ஏன் நீடிக்கிறது?

திராவிட மாடல் என்றும், விளிம்புநிலை மக்களின் காவலன் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக ஆட்சியில், அதே எளியவர்களின் உயிர்கள் காவல் நிலையங்களில் பறிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. அஜித்குமார் முதல் ஆகாஷ் வரை, வரிசை கட்டும் லாக்-அப் மரணங்கள் இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மையையே அப்பட்டமாகக் காட்டுகின்றன.

காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், தனது கட்டுப்பாட்டில் உள்ள துறையில் நடக்கும் இந்த அநீதிகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்பாரா? சமூக நீதி பேசும் ஒரு ஆட்சியில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு காவல் நிலையங்களே மரணக் கூடாரங்களாக மாறுவது அந்த மக்களுக்குச் செய்யப்படும் மிகப்பெரிய துரோகமாகும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN