Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 08 மார்ச் (ஹி.ச)
பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
தமிழகப் பெண்களின் உரிமைகளை மீட்கும் வகையில் சென்னையில் தொடங்கிய எங்களது 'மகளிர் உரிமை மீட்புப் பயணம்' இன்று 128-ஆவது நாளை எட்டியுள்ளது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெறுகிறது.
உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு எனது மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனப் பல துறைகளில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள் இன்று ஒரு நல்ல நிலையை எட்டியுள்ளனர்.
ஆனால், இவ்வளவு முன்னேற்றங்களுக்குப் பிறகும் பெண்கள் இன்றும் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழலே நிலவுகிறது. தமிழகத்தில் 2 வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும், உடல் ரீதியான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
முன்பெல்லாம் இளைஞர்களும், பெரியவர்களுமே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் இன்று 10 முதல் 12 வயது சிறுவர்கள் கூட இத்தகைய கொடுமைகளில் ஈடுபடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்குத் தமிழகத்தில் பெருகி வரும் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களே முக்கியக் காரணமாகும்.
கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிகளுக்கு அருகிலேயே போதை மாத்திரைகள் தடையின்றிக் கிடைக்கும் அளவிற்குப் போதைப் கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது.
வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் மதுவிற்கும், போதைக்கும் அடிமையாகித் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வருகின்றனர்.
இது பெண்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
எவ்வளவோ தடைகளைத் தாண்டிப் பெண்கள் கல்வி கற்க வெளியே வந்த நிலையில், இந்த போதைப் பழக்கத்தால் மீண்டும் பெண்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கும் கொடூரமான காலத்திற்குச் சென்றுவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சுமார் 14,000 வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து விசாரிக்கத் தமிழகத்தில் 54 சிறப்பு நீதிமன்றங்கள் தேவை.
ஆனால், தற்போது வெறும் 20 நீதிமன்றங்களே உள்ளன. இதனால் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கே வராத நிலை உள்ளது. 6 மாத காலத்திற்குள் வழக்கை முடிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை.
கோவையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
பெண்கள் எப்போது பயமில்லாமல் தனியாக நடமாட முடிகிறதோ, அன்றுதான் உண்மையான மகளிர் தினம். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.
பெண்களின் பாதுகாப்பிற்கு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை விட, சமுதாயத்தின் மற்றும் குடும்பங்களின் ஒத்துழைப்பே மிக அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b