Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (H.S.)
சென்னையில் குப்பை எரிஉலைத் திட்டங்களை எதிர்ப்பையும் மீறி மு.க.ஸ்டாலின் அரசு செயல்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தொட்டால் சுடும் என்று தெரிந்தே நெருப்பைச் சீண்டுவதைப் போல, சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் என்று தெரிந்தே சென்னையில் மேலும் ஒரு குப்பை எரிஉலையை அமைக்கும் பணிகளை திமுக அரசு தொடங்கியுள்ளது.
புற்றுநோய் உள்ளிட்ட ஏராளமான நோய்களை ஏற்படுத்தும் குப்பை எரிஉலைத் திட்டங்களை எதிர்ப்பையும் மீறி மு.க.ஸ்டாலின் அரசு செயல்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
சென்னையை அடுத்த வண்டலூர்&கேளம்பாக்கம் நெடுஞ்சாலையை ஒட்டி தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகம், மத்திய அரசின் இந்திய தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அடித்தட்டு ஏழை மக்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை அமைந்திருக்கும் கீரப்பாக்கம் கிராமத்தில் குப்பை எரிஉலைத் திட்டத்தையும், அதனுடன் இணைந்த நிலம் நிரப்பு (Landfill) திட்டத்தையும் செயல்படுத்த திமுக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகள், பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட 6 நகராட்சிகள் ஆகியவற்றில் தினமும் சேகரிக்கப்படும் 2400 டன் குப்பைகள் இந்த இடத்தில் கொண்டு வந்து எரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும். டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10 நச்சுத் துகள்கள் (Suspended particulate matter), ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (Volatile organic compounds) ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலுடன் கலந்து அழியாமல் நிலைத்திருக்கக் கூடியவை (POPs - Persistent Organic Pollutants), மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.
மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு டையாக்சின், 3 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகின்றன.
இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது ஆகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரிஉலையால் படிப்படியாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் உருவாக்கப்படும் குப்பையில் காய்கறி மற்றும் உணவுக் கழிவுகளே அதிகமாக உள்ளன. இவை ஈரமாகவும் எரிப்பதற்கான கலோரி மதிப்பு குறைவாகவும், மண், புழுதி கலந்ததாகவும் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்தியாவில் உருவாகும் குப்பைகள் - எரிஉலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரிஉலைத் திட்டங்கள் படுதோல்வி அடைந்தன.
மேலை நாடுகளில் குப்பை எரிஉலைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்காவில் 1991 ஆம் ஆண்டில் 187 எரிஉலைகள் இருந்தன.
ஆனால், 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 63 ஆக குறைந்து விட்டது. அதாவது 33 ஆண்டுகளில் 124 எரிஉலைகள் மூடப்பட்டன; ஆனால், ஒரே ஒரு குப்பை எரிஉலை கூட புதிதாக திறக்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘ஐரோப்பிய நாடுகள் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு மானியம் தரக் கூடாது’’ என அறிவுறுத்தியுள்ளது.
குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, மறுசுழற்சி கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது, கழித்துக்கட்டும் கழிவுகளை நிலத்தை நிரப்புவது போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளை விட, குப்பை எரிஉலை மிக அதிக செலவு பிடிக்கக் கூடியது ஆகும். கீரப்பாக்கம் குப்பை எரிஉலையால் தமிழ்நாடு அரசு பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்கும். இவ்வளவு தீமைகள் இருந்தும் கூட குப்பை எரிஉலைகளை அமைக்க திமுக அரசு துடிப்பதன் நோக்கம், அதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் பல கோடி ரூபாய் கையூட்டும், இன்னும் பல வெகுமதிகளும் தான்.
கோடிக்கணக்கில் கையூட்டு கிடைக்கிறது என்பதற்காக புற்றுநோய் உள்ளிட்ட ஏராளமான நோய்களை ஏற்படுத்தும் குப்பை எரி உலைகளை அமைக்கத் துடிப்பதை மன்னிக்க முடியாது. எனவே, கீரப்பாக்கத்தில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். அதேபோல், சென்னை கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டம், பெருங்குடி எரி உலை திட்டம் ஆகியவற்றையும் கைவிட்டு, உச்சநீதிமன்றம் 19.02.2026 அன்று உத்தரவிட்டபடி, 2026 நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் திடக்கழிவுகளை வகைப்பிரித்து மேலாண்மை செய்வதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.
குறிப்பாக, பூஜ்ய குப்பை எனப்படும் குப்பையில்லா நகரங்கள் கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான அறப்போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ