Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 09 மார்ச் (ஹி.ச.)
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 1958ஆம் ஆண்டு முன்னாள் முதல்மைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட வைகை அணை, தென் தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கி வருகிறது.
71 அடி உயரம் கொண்ட இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு 65 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை தூர்வாரப்படவில்லை. இதனால் சுமார் 15 அடி ஆழத்திற்கு வண்டல் மண் படிந்துள்ளதால் அணையின் நீர்ப்பிடிப்புத் திறன் வெகுவாக குறைந்துள்ளது.
இதனை தூர்வார அரசு மேற்கொண்ட ஆய்வுகளில் செலவு பல கோடிகளைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே இந்தத் திட்டத்திற்கு மாற்றாக அணையில் தேங்கியிருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்குவதன் மூலம் அணையை தூர்வாரி, அதன்மூலம் வருவாயை ஈட்டும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதில் முதற்கட்டமாக, விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, ஒரு ஏக்கர் நிலத்திற்கு 90 கன மீட்டர் வீதம் இலவசமாக வண்டல் மண் அள்ளிக்கொள்ள பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் இரண்டு இடங்களில் மண் அள்ளும் பணி தொடங்கிய நிலையில், விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி சிலர் செங்கல் சூளை உள்ளிட்ட வணிக நோக்கங்களுக்காக மண்ணைக் கடத்துவதாக புகார் எழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மண் அள்ளும் இடத்தை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்குவந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வாகனங்களையும் மக்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த உயரதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளுக்காகக் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை தவறாகப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
மேலும் அந்த இடத்தில் மண் அள்ளுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பொதுப்பணி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.
அதே நேரத்தில் குன்னூர் பகுதியில் வைகை அணை நீர்த்தேக்கப் பகுதிக்குள் மண் அள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அங்கும், அள்ளப்படும் மண் வணிக பயன்பாட்டிற்காக கொண்டுசெல்லப்பட்டால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதன் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN