Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 மார்ச் (ஹி.ச.)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அவரது வீட்டின் அருகில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 30 பேர் மீது காவல்துறை குற்றம்சாட்டியதோடு, 28 பேரை கைது செய்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட சம்பவம் செந்தில் உள்ளிட்ட இருவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்,மேலும் பிரதான குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 250 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கையையும்,4 குற்றப்பத்திரிகையையும் காவல்துறை தாக்கல் செய்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வரும்நிலையில் குற்றம்சட்டபட்ட அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், விஜயகுமார், விக்னேஷ், ராஜேஷ், கோபி, செந்தில்குமார், அஞ்சலை, மலர்கொடி ஆகிய 14 பேர் ஜாமீன் கோரி,சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடினர்.
அவர்களின் மனுவை ஏற்று நிபந்தனையுடன் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அதைதொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், வழக்கின் தீவிரத்தை கீழ் நீதிமன்றம் சரியாக பரிசீலிக்கவில்லை என்றும், சாட்சிகள் மீதி செல்வாக்கு செலுத்தும் அபாயம் உள்ளது என்றும், உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்ததால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனுக்களை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், அஞ்சலை மற்றும் மலர்கொடி ஆகியோரை தவிர்த்து, அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்டஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உடனடியாக சரணடையவும் ஆணையிட்டது.
ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் சரணடைய அவகாசம் கோரி அஸ்வத்தாமன் உள்பட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம் மார்ச் 13ம் தேதி வரை சரணடைய அவகாசம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து, குற்றம்சாட்டப்பட்ட பிரதீப், ஹரிஹரன், விக்னேஷ், சிவா, முகிலன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைரவன் மற்றும் N.கருப்பசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam