கரூர் வழக்கு - தவெக தலைவர் விஜய் விசாரணைக்கு நாளை ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
சென்னை, 09 மார்ச் (ஹி.ச.) நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியை தொடங்கிய விஜய், இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுலா செல்ல விஜய் திட்டம் வ
கரூர் வழக்கு - தவெக தலைவர் விஜய் விசாரணைக்கு மீண்டும் நாளை ஆஜராக  சி.பி.ஐ. சம்மன்


சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)

நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியை தொடங்கிய விஜய், இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுலா செல்ல விஜய் திட்டம் வகுத்தார்.

அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தி முடித்தார்.

இதனை தொடர்ந்து கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்றார்.

அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி (12.01.2026) டெல்லியில் உள்ள சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகத்தில் சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் முதல் கட்ட விசாரணை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனவரி 19ஆம் தேதி (19.01.2026) மீண்டும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட விஜய்யிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் பரப்புரை கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நாளை (10.03.2026) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்குப் புதிதாகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் த.வெ.க. வேட்பாளர்கள் நேர்காணலை விஜய் நாளை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ள நிலையில், பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b