Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், கோணாம்பேடு கிராம பொது நல சங்க தலைவர் ஜி.கருணாநிதி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம் புருஷோத்தமன் அம்மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களின் பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணாம்பேடு, நாராயணபுரம் போன்ற கிராமங்களில், அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பங்களை சேர்ந்தவர்களும், பள்ளி மற்றும் கல்லுாரிகளை கட்டி உள்ளனர்.
செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி நிறுவனம், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளிகள், பொறியியல் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலை உள்ளன. அதிமுக, எம்.பி, தம்பிதுரையின் குடும்ப உறுப்பினர்கள், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
வருவாய் ஆவணங்களில், நீர் பிடிப்பு, கல்லாங்குத்து என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, மாணவ - மாணவியருக்கான கல்லூரி விடுதிகள், பயிலகம், துணைமின் நிலையம், கல்லூரி பஸ்களை நிறுத்த தனி சாலை போன்றவற்றை அமைத்து உள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டு முதல், பொது நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் , கோட்டாட்சியர் உள்ளிட்டோர் நிலங்களை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, கடந்த பிப்ரவரி 10 ல் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தாக்கல் செய்த சர்வே அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் அளவீடு செய்து. இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும், என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b