ஆகாஷ் லாக்கப் மரணம் - வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
சிவகங்கை, 09 மார்ச் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சார்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (26) என்கிற பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரும் அவரது நண்பர்கள் குணா, அலெக்ஸ், சரவணன் முகேஷ் கண்ணன் ஆகியோர்களுக்கும் ரயில்வே காலணியைச் சேர்ந்த ஜெயக்கு
Akash


சிவகங்கை, 09 மார்ச் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சார்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (26) என்கிற பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரும் அவரது நண்பர்கள் குணா, அலெக்ஸ், சரவணன் முகேஷ் கண்ணன் ஆகியோர்களுக்கும் ரயில்வே காலணியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆதனூரைச் சேர்ந்த ஆழகர் ஆகியோர்களுக்கும் 5.3.2026 அன்று மாலையில் கிருஷ்ணராஜபுரத்தில் தகராறு நடந்துள்ளது.

அன்று இரவு மானாமதுரை சியோன்நகர் அருகில் மேற்படி ஜெய்குமார் மற்றும் ஆழகர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த மேற்படி ஐந்து பேரும் கத்தி போன்ற ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஜெய்குமார், ஆழகர் இருவரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 6.3.2026 பிற்பகல் 12 மணி அளவில் ஆகாஷ் மற்றும் நான்கு பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களை காவல்துறையினர் எங்கு வைத்துள்ளனர் என்ற விபரம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

திடீரென 7.3.26 அன்று இரவு ஆகாஷ் பெற்றோர்களைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர் ஆகாஷ் மதுரை அரசு இராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். .

பதறியடித்து பெற்றோர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆகாசை பார்த்து உள்ளனர்.

அப்போது ஆகாசினுடைய கால் முறிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆகாஷ் தன்னுடைய பெற்றோர்களிடம் பெரிய கல்லை தன்னுடைய கால் மீது போட்டு காவலர்கள் காலை உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மகனுக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு உணவு தயார் செய்து வருவதற்காக பெற்றோர்கள் வீடு திரும்பி இருக்கின்றனர். ஆனால் 8.3.26 அன்று காலையில் பெற்றோர்களுக்கு ஆகாஷ் இறந்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரோடு கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இராமநாதபுரம் சிறையில் அடைத்திருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகாஷ் லாக்கப் மரணம் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN