கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு
நீலகிரி, 09 மார்ச் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் தேவர்சோலை பகுதியில் உள்ள காரக்குன்னு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவி (62)
Wild Elephant


நீலகிரி, 09 மார்ச் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் தேவர்சோலை பகுதியில் உள்ள காரக்குன்னு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவி (62) மற்றும் லிங்கராஜ்.

இவர்கள் இருவரும் தேவர்சோலை பஜார் பகுதிக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டிற்கு செல்லும் வழியாக உள்ள தேயிலை தோட்டப் பாதையில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த காட்டு யானை திடீரென அவர்களை துரத்தியதாக கூறப்படுகிறது.

கரடு முரடான தேயிலை தோட்டப் பகுதியில் இருந்ததால் வேகமாக ஓட முடியாத நிலையில் இருவரும் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இன்று அதிகாலை காரக்குன்னு பகுதியைச் சேர்ந்த மக்கள் தேயிலை தோட்டம் வழியாக பணிக்குச் சென்றபோது ரவி மற்றும் லிங்கராஜ் இருவரும் அருகருகே உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காட்டு யானை தாக்குதலில் இருவர் உயிரிழந்ததை கண்டித்து கிராம மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக எடுக்க அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN