தவறான சிகிச்சையால் குழந்தை மரணமா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை
சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அருண்குமார். கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த ஆண்டு சுஜித்ரா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு பெண் க
Omandurar Hospital


சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அருண்குமார். கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த ஆண்டு சுஜித்ரா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக குழந்தைக்கு சளி பிரச்சனை அதிகமாக இருந்ததால், கடந்த 30 ஆம் தேதி, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர் அழைத்து சென்றனர்.

அப்போது செவிலியர் ஒருவர், குழந்தைக்கு ஊசி போட்டதாக தெரிகிறது. இந்நிலையில், ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8 வயது சிறுமிக்கு போட வேண்டிய ஊசியை, நான்கு மாத குழந்தைக்கு போட்டதால், மருந்தின் வீரியத்தை தாங்க முடியாமல் குழந்தை இறந்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இந்த செய்தி, ஊடகங்களிலும் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக கருதப்படும் ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்த இந்நிகழ்வு மக்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்த சூழலில், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியரை கைது செய்ய வேண்டும் என பெற்றோர்களும், உறவினர்களும் வாக்குவாதம் செய்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த மருத்துவ அறிக்கையில் குழந்தைக்கு என்ன ஊசி போடப்பட்டது; குழந்தைக்கு என்ன மாதிரியான பிரச்சனை இருந்தது என்பன போன்ற விவரங்கள் தெரியவரும்.

அந்த அறிக்கை வந்த பிறகே, அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க முடியும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தவறு இருப்பது உறுதியாகும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN