Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (47) தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரம்யா (38) என்ற பெண்ணுடன் சுதாகருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொடுங்கையூர் காமராஜர் சாலையில் இருவரும் சேர்ந்து பைக் ஷோரூம் ஒன்றை நடத்தி வந்ததாகவும், அதில் பண பிரச்சனை ஏற்பட்டதால் சில மாதங்களிலேயே அந்த ஷோரூம் மூடப்பட்டதாகவும் தெரிகிறது. அதன் பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ரம்யாவை விட்டு விலகி சுதாகர் தனது மனைவியுடன் மீண்டும் வாழத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா, நேற்று இரவு 12 மணியளவில் கருப்பு நிற புர்கா அணிந்து சுதாகர் வீட்டிற்கு வந்து, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
திடீரென சத்தம் கேட்டு வெளியே வந்த சுதாகர் உடனடியாக தீயை அணைத்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரவு ரோந்து பணியில் இருந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இன்று காலை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த ரம்யா (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சுதாகர் தன்னை விட்டு விலகிய ஆத்திரத்தில் ரம்யா இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ரம்யா மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ