Enter your Email Address to subscribe to our newsletters

கூடலூர், 01 ஏப்ரல் (ஹி.ச.)
தேனி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போதைய மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளருமான ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
சிவகாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இந்த இணைவு நடைபெற்றது.
ஜெயக்குமார், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அரசேந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது, தேனி மாவட்ட அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சொந்த மாவட்டமான ஆண்டிபட்டியில் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்டிபட்டி யூனியன் அலுவலகம் முதல் எம்ஜிஆர் சிலை வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மிகப்பெரிய ஊர்வலமாக சென்ற பொதுமக்கள், அதிமுகவில் இணைந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “திமுக குடும்ப ஆட்சி மற்றும் கார்ப்பரேட் அரசியலாக மாறி விட்டது. உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அடித்தட்டு தொண்டர்களையும் சமமாக மதிக்கிறார். தேனி மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, அந்த வெற்றியை அவரிடம் சமர்ப்பிப்போம் என்று தெரிவித்தார்.
மேலும், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்வாக்கு கொண்ட ஜெயக்குமார், கடந்த காலங்களில் ஆண்டிபட்டி தொகுதியில் திமுக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரின் அதிமுக சேர்க்கை திமுக வட்டாரங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதிமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J