Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 01 ஏப்ரல் (ஹி.ச.)
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை ஒரே நாளில் 114.5% உயர்த்தியுள்ளன. அதாவது, ஒரு கிலோ லிட்டருக்கு சுமார் 1,10,703.08 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2022-ல் உக்ரைன் போரின் போது ஏற்பட்ட உச்சத்தைத் தாண்டி, முதல் முறையாக எரிபொருள் விலை ₹2 லட்சம் என்ற எல்லையைக் கடந்துள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி 5.7% உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இது இரண்டாவது தொடர் உயர்வாகும்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் மோதல் சர்வதேச எண்ணெய் விநியோகச் சங்கிலியைச் சிதைத்துள்ளது.
சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஈராக் போன்ற முக்கிய நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளன.
உலக எண்ணெய் வணிகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் ஹார்மூஸ் ஜலசந்தி பாதையில், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், இந்திய விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் எரிபொருள் பயன்பாடு மற்றும் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு விமான நிறுவனத்தின் மொத்த இயக்கச் செலவில் 40% எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. இந்த விலை உயர்வால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்கள் மிக விரைவில் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல விமான நிறுவனங்கள் 'எரிபொருள் கூடுதல் கட்டணத்தை' அமல்படுத்தியுள்ளன. வரும் நாட்களில் இது மேலும் விரிவுபடுத்தப்படலாம் என ஐ.ஏ.டி.ஏ தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை காலப் பயணங்களைத் திட்டமிடுவோருக்கு இந்தக் கட்டண உயர்வு பெரும் சுமையாக அமையும்.
இந்தியன் ஆயில் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் கரன்சி மதிப்பு மாற்றங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எரிபொருள் விலையை மாற்றி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam