2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.) 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டார். போதை இல்லா தமிழகம், வேளாண்மை, நீர் மேலாண்மை, ப
Anb


சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டார்.

போதை இல்லா தமிழகம், வேளாண்மை, நீர் மேலாண்மை, பள்ளிக் கல்வி, உயர்கல்வி, நல்வாழ்வு, வேலைவாய்ப்பு, சமூக நீதி, ஊழல் ஒழிப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 45 தலைப்புகளில் 153 பக்கங்கள் கொண்ட பாமக தேர்தல் அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக தேர்தல் தயாரிப்புக் குழுவினர் உடன் இன்று வெளியிட்டார்.

பாமகவின் தேர்தல் அறிக்கையில்,

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படுன் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும், புதிய சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் பேசி இது சாத்தியமாக்கப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். மகளிருக்கான உரிமைத் தொகை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அரிசி அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும். பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

*ரூ.10-க்கு மக்கள் சாப்பாடு*

நகர்புறங்களில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.10க்கு சோறு, சாம்பார், ரசம், தயிர், கூட்டு பொரியல், ஊறுகாய் நிறைவான மதிய உணவு வழங்கப்படும். ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.25க்கு அசைவ மதிய உணவு வழங்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் நகரப் பேருந்துகளில் அனைவரும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மூத்த குடிமக்களுக்கள், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.60 வயதான அனைவருக்கும் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதி. தமிழ்நாட்டில் சிறுபான்மையினரின் அச்சத்தை போக்கும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடி தயாரிக்கப்படது

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்கப் பிற மாநில முதலமைச்சர்களுடன் இணைந்து நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவண் அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டுக்கு உள்ளேயான தகவல் பரிமாற்றங்களை தமிழில் செய்ய அழுத்தம் தரப்படும்.நடுவண் அரசின் விளம்பரங்களை அந்தந்த மாநிலங்களின் மொழியில் வெளியிடுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

அனைத்து MTC பேருந்துகளும் அனைவருக்கும் இலவசம் ஆக்கப்படும் உள்ளிட்டவை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,

ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பாமக தேர்தல் அறிக்கைதான் சிறந்தது என்பது ஊடக நண்பர்கள் மட்டுமல்லாது படித்தவர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் கூறி உள்ளனர். எங்களது தேர்தல் அறிக்கையைதான் இதுவரை ஆண்ட ஆளுகின்ற கட்சிகள் காப்பி அடித்துள்ளன.தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு கொடுக்கும் சத்தியம். எங்களது தேர்தல் அறிக்கையை காப்பியடிப்பது எங்களுக்கு பெருமைதான்.

திமுகவின் கடந்த தேர்தல் அறிக்கையில் 13% தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக செய்தது நம்பிக்கை துரோகம். திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது கதாநாயகனோ, வில்லனோ, நகைச்சுவை நடிகரோ அல்ல. குரூப்பில் டான்ஸ் ஆடும் ஒருவர். கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்தது என்ன? வாக்குறுதிகளை ஏன் செய்யவில்லை?

பாமக தேர்தல் அறிக்கை என்பது வித்தியாசமான தேர்தல் அறிக்கை.தமிழ்நாட்டின் முதன்மை பிரச்சினை மதுவும் போதையும்தான். அதனால் வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அடுத்த பிரச்சினை, வேலை வாய்ப்பின்மை என்பது அடுத்தக்கட்ட பிரச்சினை. மது, போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றுமில்லை.

பட்டியல் மக்கள், வன்னியர் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக இரு சமூகத்திற்கும் துரோகத்தை தவிர எதுவும் செய்யவில்லை. கடந்த தேர்தலில் அளித்த மீண்டும் 63 வாக்குறுதிகளை இந்த தேர்தலிலும் திமுக அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ஊழல் செய்த திமுகவின் ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

1.30 கோடி லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். வேலைவாய்ப்பு அளிப்பது தான் எங்களின் முக்கிய கடமையாக பார்க்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை அல்லது தனியார் வேலை அளிக்க உறுதி செய்யப்படும். தனியார் மற்றும் அரசு துறைகளை சேர்த்து ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழ்நாட்டில் மதுவிலக்கு குறித்து ஒரு வார்த்தை கூட திமுக தேர்தல் அறிக்கையில். அதிமுக படிப்படியாக கொண்டு வருவோம் என கூறி உள்ளனர். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும்.

பாமக சமூகநீதியை அடிப்படையாக கொண்ட கட்சி. அனைத்து சாதிகளும், ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்கள், அவர்கள் போன்ற நிலையில் உள்ளவர்கள் கல்வியில், வேலைவாய்ப்பில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தை பெறுவோம். சாதி மோதல்கள் ஏற்படும் போது அப்பிரச்சினை பெரிதாகமல் நாங்கள்தான் பார்த்துக் கொள்வோம்.

பாமக தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாட்டிலேயே நிதியாதரம் உள்ளது. ஆனால் திமுக அதனை கொள்ளையடிக்கிறது.

தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் உள்ளன. மணல் கொள்ளை, கல்குவாரி, டாஸ்மாக், வரி ஏய்ப்பு என கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி மூலதனத்திற்காக செலவு செய்யவே இல்லை. நிர்வாக திறனே இல்லாமல் ஆட்சி நடத்துகிறார்கள்.

கடன் வாங்குவது தவறு கிடையாது. அதனை மூலதன செலவில் முதலீடு செய்ய வேண்டும். அதிமுக - பாமக கூட்டணி என்பது திமுகவு ஊழல் ஆட்சியை நீக்க வேண்டும் என்பதற்காகதான். வைகோ, திருமா, காங்கிரஸ் கட்சியினர் என அனைவரும் திமுக மீது எவ்வளவோ ஊழல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் கொள்கை வேறுபாடு இருக்கலாம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதால்தான் அனைவரும் கூட்டணி அமைத்துள்ளோம். திமுக கூட்டணியில் கொள்கையோடு உள்ளார்களா? தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா வலிமையாக இல்லை. நேர்மையான நீதிபதிகள் வந்தால் திமுகவினர் கதை முடிந்தது.

அமலாக்கத்துறை மணற்கொள்ளை குறித்தான ஆதாரத்தை தமிழ்நாடு அரசிடம் அளித்தால் அதனை விசாரணை செய்யாமல் நீதிமன்றம் செலவு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் எவ்வளவு ஊழல் செய்கிறார்கள். மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக எடுக்க முடியாது. மாநில அரசு எடுத்தால்தான் துல்லியமான தகவல்கள் சாதிவாரி கணக்கெடுப்பில் எடுக்க வேண்டும். முதலமைச்சர் என்பவர் பொதுமக்கள் குறித்தான தகவல்களை திரட்டி அதனடிப்படையில்தான் திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால், இந்த தகவல் குறித்து எதுவே தமிழக அரசிடம் இல்லை.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை போன்ற மக்களுக்கு நேரடியாக பணம் அளிக்கும் திட்டங்களை வரவேற்கிறோம்.

ஆனால், கடந்த ஆண்டு பொங்கள் வந்த போது பணம் அளிக்கவில்லை, தேர்தலுக்கு முன்பான பொங்கல் தொகை, கோடை காலத்திற்கு ஆன மகளிர் உரிமைத் தொகையை அளிப்பது தேர்தலுக்காகதான். தமிழ்நாட்டு மக்களை சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

தமிழ்நாடு மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில்தான் உள்ளனர் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ