Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச.)
பங்குச் சந்தையில் டெரிவேட்டிவ்கள் (F&O) வர்த்தகம் மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் நிலையில், மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன.
இந்த மாற்றங்கள், குறிப்பாக ஊக வணிகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன.
2026–27 நிதியாண்டு பட்ஜெட்டில், ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்திற்கான பத்திரப் பரிவர்த்தனை வரி (STT) 0.02%-லிருந்து 0.05% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் பிரீமியம் மற்றும் எக்சர்சைஸ் மீதான STT முறையே 0.10% மற்றும் 0.125%-லிருந்து 0.15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கி புதிய கடன் வழங்கும் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி, மூலதனச் சந்தை இடைத்தரகர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் அனைத்தும் 100% பிணையத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்.
இது தரகர்களின் நிதி திரட்டும் திறனை கட்டுப்படுத்தி, சந்தை வர்த்தக நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செலவு எவ்வளவு அதிகரிக்கும்?:
₹10 லட்சம் மதிப்புள்ள ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில், முன்பு STT ரூ.200 ஆக இருந்த நிலையில், புதிய விதிப்படி அது ரூ.500 ஆக உயரும். இதனால், ஒவ்வொரு வர்த்தகத்திலும் ரூ.300 கூடுதல் செலவாகும்.
அதேபோல், ₹20,000 மதிப்புள்ள ஆப்ஷன்ஸ் பிரீமியத்தில், முன்பு ரூ.20 இருந்த STT தற்போது ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் ரூ.10 அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்.
நிபுணர்கள் கருத்து:
நிபுணர்கள் கூறுகையில், இந்த வரி உயர்வு டெரிவேட்டிவ் வர்த்தகத்திற்கே பொருந்தும். டெலிவரி அடிப்படையிலான ஈக்விட்டி முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் மீது எந்த மாற்றமும் இல்லை. எனினும், அடிக்கடி வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு (இன்ட்ராடே, வாராந்திர ஆப்ஷன்கள்) மொத்தச் செலவு கணிசமாக உயரும் அபாயம் உள்ளது.
உதாரணமாக, ₹5,000 மதிப்புள்ள நிஃப்டி ஆப்ஷனில் STT ரூ.5-லிருந்து ரூ.7.50 ஆக உயர்கிறது. ஒரு வர்த்தகத்திற்கு ரூ.2.50 மட்டுமே அதிகரிப்பாகத் தோன்றினாலும், தினசரி பல வர்த்தகங்கள் மேற்கொள்ளும் போது, இந்தச் செலவு சேர்ந்து லாபத்தை குறைக்கும்.
Hindusthan Samachar / JANAKI RAM