Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை அயனாவரம் ஜாயின்ட் ஆபீஸ் பகுதியில் வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த குடியிருப்பில் இருந்து கூட்டத்திற்கு நடுவே மதுபாட்டில்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாட்டில் கண்ணாடி பட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட தவெக பெண் ஒருவர் காயமடைந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் கோபமடைந்த வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா காவல்துறையினர் உடனடியாக கூட்டத்தில் மது பாட்டில் வீசிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இங்கிருந்து யாரும் நகரமாட்டோம் என பேசியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொதுக் கூட்டத்தில் பேசிய ஆதவ் திமுக தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது என்றும் எங்களை முடக்க சதித்திட்டம் தீட்டி இதுபோன்ற நிகழ்வுகளை அரங்கேற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை அடுத்து மதுபாட்டில் வீசிய சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளதாகவும், அப்போது விடுதியில் தங்கியிருந்த அயனாவரம் பகுதியை சேர்ந்த ரித்திக் (19) மற்றும் உதயசூரியன் என்ற அப்பு குட்டி(53) ஆகிய இருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மதுபாட்டில்களால் தாக்கி கொண்ட போது தவறுதலாக மதுபாட்டில் பொதுக் கூட்டத்தில் விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் உதயசூரியன் என்ற அப்பு குட்டி அயனாவரம் வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும், ரித்திக் மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருதாக தெரிவித்துள்ள காவல்துறையினர்
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாட்டில் வீசியது தெரியவந்ததுள்ளது என்றும் இருவரும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் அயனாவரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ