2ஜி வழக்கு ஆவணங்கள் ராஜாவுக்கு வழங்க தேவையில்லை – சிபிஐ உயர்நீதிமன்றத்தில் பதில்
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.) 2ஜி வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி அளித்த சாட்சியத்தைச் சார்ந்த ஆவணங்களை, சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராஜாவுக்கு வழங்க அவசியமில்லை என சிபிஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல
High court


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

2ஜி வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி அளித்த சாட்சியத்தைச் சார்ந்த ஆவணங்களை, சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராஜாவுக்கு வழங்க அவசியமில்லை என சிபிஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராஜா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சுமார் எட்டு ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டு, 2023ஆம் ஆண்டு ஆ.ராஜா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆ.ராஜா தாக்கல் செய்த மனுவில், 2013ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் 2ஜி வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்தபோது, தன்னிடம் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக குறிப்பிட்டார்.

அந்த வாக்குமூலத்தின் விவரங்களை தற்போதைய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியிடம் வழங்கியிருந்தாலும், அது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை என்றும், அதை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

எனவே, அந்த ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி, மனுதாரர் கோரிய ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை என பதில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசாவின் நண்பர் கிருஷ்ணமூர்த்தி, தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவையும் விசாரித்த நீதிபதி, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இரண்டு மனுக்களையும் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ