சென்னை மெட்ரோவில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று சென்னை நகரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் சேவையில
Mk


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று சென்னை நகரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் சாதாரண பயணியாகவே மெட்ரோ ரயிலில் பயணம் செய்த முதலமைச்சர், அங்கு பயணித்த பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடினார்.

பயணிகளின் கருத்துகளை கவனமாகக் கேட்டு, மாநில வளர்ச்சி மற்றும் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி, தேர்தலில் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

மெட்ரோ ரயிலில் பயணித்த மக்கள், முதலமைச்சரை நேரில் சந்தித்ததில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். பலர் அவருடன் உரையாடி தங்களது கோரிக்கைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், பொதுமக்களுடன் நெருக்கமாக பழகிய முதலமைச்சர், பலருடன் செல்பி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். இது பயணிகளிடையே உற்சாகமான சூழலை உருவாக்கியது.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சேவையில் நேரடியாக பயணம் செய்து வாக்கு சேகரித்தது, தேர்தல் பிரச்சாரத்தில் தனித்துவமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. நகரின் பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து ஆதரவைப் பெறும் இந்த அணுகுமுறை, அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ