Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 2 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை சுமார் 17 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்துதல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் தொடங்கவுள்ளது.
தேர்வுத் துறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் பணியை முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டின்போது 100-க்கு 100 (சென்டம்) மதிப்பெண் பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலர் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தொடர்பாக, அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் ஏற்கெனவே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதை பின்பற்றி மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து மதிப்பீட்டுப் பணியின்போது முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவர்களின் விடைத்தாள்களைக் கவனமாக ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டுமென அண்மையில் நடைபெற்ற மண்டல கூட்டத்தில் முடிவானது.
இதையடுத்து, அனைத்து முகாம் அலுவலர்களும் தங்கள் மையத்தில் முழு மதிப்பெண் பெற்ற தேர்வர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்து, அவற்றை ஆராய்ந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
என அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b