த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
காரைக்குடி, 10 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித்
த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை


காரைக்குடி, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்களும் பறக்கும் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரைக்குடியில் இன்று சோதனை மேற்கொண்டனர்.

காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்ய இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை வந்த தவெக தலைவர் விஜய், அங்கிருந்து தேர்தல் பிரசார வாகனத்தில் காரைக்குடி செல்கிறார்.

மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் எஸ்.எஸ். கோட்டை அருகே

அவரது வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனைக்குப் பிறகு வாகனத்தை விடுவித்ததையடுத்து விஜய், காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

சிவகங்கை மாவட்ட தவெக வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று பிரசாரம் செய்கிறார்.

மதியம் 12:00 மணி முதல் 2:00 மணிக்குள் பிரசாரம் செய்ய, தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரசாரத்தின்போது, 20 டாக்டர்கள், 200 தன்னார்வலர்கள் 'வாக்கி டாக்கி'யுடன் இருக்க வேண்டும்.

இலவச பொருட்கள் வழங்கக்கூடாது.

அனுமதியளித்த நேரத்திற்குள் பிரசாரம் செய்ய வேண்டும்.

போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது.

கண்ணதாசன் மணிமண்டபம், மாநகராட்சி அலுவலக நுாலகம் ஆகிய அரசு கட்டடங்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது.

மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

முக்கியமாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களை பிரசாரத்திற்கு பயன்படுத்த கூடாது என்பன உட்பட, 37 நிபந்தனைகளை, தேர்தல் அதிகாரிகள் விதித்துள்ளனர்.

இதையடுத்து, விஜய் பிரசாரம் செய்யும் இடத்தில் உள்ள மரங்களில் தொண்டர்கள் ஏறுவதைத் தடுக்கும்வகையில், மரங்களை சுற்றி, தகர ஷீட் போடப்பட்டது.

அங்குள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b