சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும் - பாஜகவினர் புகார்
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், ஊடகப் பணியாளர்களுக்கு தொந்தரவு அளித்ததாக குற்றம்சாட்டிய பாஜகவினர், அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பூகார் அளித்தனர். முன்னாள் டிஜி
BJP


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், ஊடகப் பணியாளர்களுக்கு தொந்தரவு அளித்ததாக குற்றம்சாட்டிய பாஜகவினர், அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பூகார் அளித்தனர்.

முன்னாள் டிஜிபி பாலச்சந்திரன், பாஜக சட்டப்பிரிவு தலைவர் குமாரகுரு, முன்னாள் சட்டப்பிரிவு தலைவர் சௌந்தரராஜன், முன்னாள் ராஜ்யசபா எம்.பி நரசிம்ம ராவ் ஆகியோர் கொண்ட குழு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சென்னை தஸைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து இந்த புகாரை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குமாரகுரு,

சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்-ஐ உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். சமீபகாலமாக யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடும் ஊடகவியலாளர்கள் மீது சட்டவிரோதமாக சம்மன் அனுப்பி காவல் துறை அச்சுறுத்தி வருகின்றது.

உதாரணமாக, சமீபத்தில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கார்த்திக் என்ற யூடியூபரை அழைத்து விசாரணை நடத்தி, குறிப்பிட்ட நிகழ்வு ஒன்றை செய்தியாக வெளியிட்டது குறித்து மிரட்டியுள்ளனர்.

இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

முன்னாள் எம்.பி. நரசிம்ம ராவ் கூறியபோது,

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை அரசியல் நோக்கில் பயன்படுத்தி வருகிறார். எதிர்மறையான கருத்துகளை வெளியிடும் யூடியூபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது சட்ட விரோதமானதும், ஜனநாயகத்திற்கு விரோதமானதும் ஆகும் என்றார்.

மேலும் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக இன்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். தேவையானால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வோம்.

உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

இதனை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN