Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில், வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர் நலச் சங்கத்தின் தலைவர் கே.ஆர்.குகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'ரேஷன் பொருட்கள் விநியோதம், எரிவாயு சிலிண்டர் பதிவு, வங்கி பரிவர்த்தனை விவரங்கள் போன்றவை பயனாளர்களின் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதை போல, வாக்குப்பதிவில் முறைகேடு மற்றும் கள்ள ஓட்டுக்கள் போடுவதை தடுக்கும் வகையில், வாக்கை பதிவு செய்தவுடன் அதை உறுதிசெய்யும் வகையில் வாக்காளரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் (vote confirmation sms) திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 'மனுதாரர் தரப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். ஏற்கெனவே தேர்தல் நடைமுறைகள் துவங்கிவிட்ட நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது. அடுத்த தேர்தலில் இந்த நடைமுறையை அமல்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN