Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்குடி, 10 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06ஆம் தேதி (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது.
இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதே போல் முதல் முறை தேர்தலைச் சந்திக்கும் த.வெ.க. தேர்தல் பரப்புரைக்கு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று (10.04.2026) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய சென்றார்.
இதற்காக விஜய், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்குக் காலை 10 மணியளவில் வந்தடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு சென்றடைந்தார்.
தேர்தல் பரப்புரையின் போது ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்து திடீரென இறங்கி சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தது பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. தனது பிரம்மாண்ட பரப்புரை வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், அங்கிருந்த ஒருவரிடம் சைக்கிளை வாங்கி காரைக்குடி நகரின் முக்கிய வீதிகளில் சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சாமானிய மனிதர்களுடன் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் விஜய்யின் இந்தச் செயல் அமைந்தாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் முழக்கமிட்டுக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்தனர்.
Hindusthan Samachar / vidya.b