Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 10 ஏப்ரல் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள காரங்காடு அடுத்த செருப்பங்கோடு என்ற இடத்தை சேர்ந்த ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (31) என்பவர் செருப்பங்கோடு ஜங்ஷனில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
கடையில் உள்ள காய்கறிகளை லோடு ஆட்டோவில் எடுத்துச் சென்று ஊர் ஊராக விற்பனை செய்வது வரும் ராஜேஷ் நேற்று வியாபாரம் முடிந்து இரவு வழக்கம் போல ஆட்டோவை வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு தூங்கச் சென்று விட்டார்.
நள்ளிரவு சுமார் 12 மணியளவில் ஆட்டோ தீப்பிடித்து எரிவதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
அவர்கள் சத்தம் போடவே அலறல் சத்தம் கேட்டு ராஜேஷ் பதறியடித்து வெளியே வந்துள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.
ஆனால் அதற்குள் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது.
இதுகுறித்து ராஜேஷ் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் தனது உறவினரான திக்கணங்கோடை சேர்ந்த வாலிபர் ஒருவரின் பெயரை தெரிவித்துள்ளார்.
தனது உறவினரான அந்த வாலிபர் மது போதையில் அடிக்கடி மிரட்டுவதும், ஆட்டோவை எரித்து விடுவேன் என கூறியும் வந்துள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.
அவரை பிடித்து விசாரிக்க போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் அருகில் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோ உறவினராலேயே எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b