Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச)
மயிலாடுதுறையில் நடைபெற்ற கொலை வழக்கில் 17 வயது இளஞ்சிறாருக்கு அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து முக்கிய உத்தரவு வழங்கியுள்ளது.
2022ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நகரத் தலைவர் கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்சிறாரை, வயது வந்தவர்களுடன் சேர்த்து விசாரித்ததும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு பதிலாக மத்திய சிறையில் அடைத்ததும் சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் கண்டித்தது.
இந்த வழக்கில், சிறாரின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர்மோகன், வழக்கை மயிலாடுதுறை சிறார் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர்.
மேலும், அந்த நீதிமன்றம் ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அதுடன், இளஞ்சிறாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, சட்டவிரோதமாக காவலில் வைத்ததற்காக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர்.
சிறார் வழக்குகளை தனியாக விசாரிக்க வேண்டிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டது தவறு என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ