Enter your Email Address to subscribe to our newsletters

இஸ்லாமாபாத், 11 ஏப்ரல் (ஹி.ச)
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 8-ம் தேதி தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இதில் அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வெளியுறவு துணை அமைச்சர் மஜித் தக்த் ரவஞ்சி ஆகியோரும் பங்கேற்கின்றனர். சமரச தூதர்களாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் ஆகியோர் செயல்பட உள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர், அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்குத் தங்களது விமானத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில், கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதில், ஈரானின் மினாப் நகரத்தில் அமைந்திருந்த பள்ளிக் கூடத்தின் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிக் குழந்தைகள் உள்பட சுமார் 165 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு, அமெரிக்காதான் காரணம் எனக் கூறி அதற்கான ஆதாரங்களை ஈரான் அரசு வெளியிட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகளின் நினைவாக ஈரானின் பிரதிநிதிக் குழுவுக்கு மினாப் 168 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழுவினர் சென்ற விமானத்தின் காலி இருக்கைகளில் மினாப் குழந்தைகளின் படங்கள் மற்றும் அவர்களின் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி, ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் எம்.பி. காலிபாஃப் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்த விமானப் பயணத்தில் எனது நண்பர்கள், மினாப் 168 எனக் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b