Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து தமிழக அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் சந்தீப் மிட்டல் தமிழ்நாடு அரசின் ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் காவல்துறை தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) நியமிக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், சந்தீப் மிட்டல் பல்வேறு விதமான புகார்களுக்கு உள்ளானவர் என்றும் அவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்பு மற்றும் சிந்தாந்த ஆதரவு கொண்டவர் என்றும், எனவே தேர்தல் நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவர் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி வழங்கிய உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. அதாவது சந்தீப் மிட்டல் மீது பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து, இடமாற்றம் செய்யப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக தொடர்வார் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதே போல் ஆயுதப்படை போலீஸ் டிஜிபியாக சந்தீப் மிட்டல் மீண்டும் அதே பணிக்குச் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டேவிட்சன் தேவாசீர்வாதம் தன்னுடைய பழைய பொறுப்பிற்கு மீண்டும் சென்றுள்ளார்.
அதே போல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சந்தீப் மிட்டல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b