Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
வார விடுமுறை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் வழக்கத்தை காட்டிலும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள்.
அவர்கள், எவ்வித சிரமும் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக மாநில அரசு போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மொத்தம் 2,119 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது,
இன்று (ஏப்ரல் 11), நாளை (ஏப்ரல் 12) ஆகிய வார விடுமுறை மற்றும் ஏப்ரல் 14ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு 395 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இன்று 90 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து இன்று மேற்கண்ட ஊர்களுக்கு 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக அனைத்து இடங்களில் இருந்தும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய நாட்களில் 735 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.
Hindusthan Samachar / vidya.b